கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அதில், முதற் கட்டமாக இன்று 2 நாள் பயணமாகக் கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த 2 நாட்களில் அரசாங்கம் மற்றும் கட்சி ரீதியான பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அதன்பின், 11.30 மணி அளவில் விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ.114.16 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மதியம் 12 மணி அளவில் கள ஆய்வின் ஒரு பகுதியாக, முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆணைகளை அந்தந்த நில உரிமையாளர்களுக்கு வழங்குகிறார்.
பின் அங்கிருந்து புறப்படும் அவர் மாலை 4 மணி அளவில் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.