சென்னை : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் வரும் நவம்பர் 14 (வியாழன்) அன்று பான் இந்தியா படமாக தமிழ் , ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
நாளை மறுநாள் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த Fuel டெக்னாலஜி எனும் நிறுவனம் கங்குவா பட தயாரிப்பு நிறுவனம் தங்களுக்கு 1.6 கோடி ரூபாய் தரவேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது.
அதாவது, சூர்யாவின் 3 படத்திற்கு ஹிந்தி டப்பிங் உரிமையை ரூ.6.6 கோடிக்கு பெற்ற அந்நிறுவனத்திற்கு, படம் கொடுக்காததால், 5 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திருப்பி கொடுத்துள்ளனர்.
ஆனால், பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் அளிக்காத காரணத்தால் Fuel டெக்னாலஜி பட நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் பணத்தை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என கங்குவா பட நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.