ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஸ்ரீநகரின் பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முக்கிய விழாவிற்கு துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜேஷ் ராய் பட்நாகர் தலைமை வகித்தார். தொடர்ந்து நடந்து அணிவகுப்பில், குளிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப்., எஸ்.எஸ்.பி., என்.சி.சி. மற்றும் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.
அணிவகுப்புக்குப் பிறகு, யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பட்நாகர், “ஜம்மு காஷ்மீரை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்ல நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2022-ம் ஆண்டில் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்திருக்கிறார்கள். 2023-ல் இந்த எண்ணிக்கை 2.11 கோடியாக உயர்ந்திருக்கிறது. 31,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் PSC மற்றும் SSRB போன்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.
மேலும், பணியின்போது உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு ஆலோசகர் பட்நாகர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல, உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்த துணை இராணுவம் மற்றும் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தார்.
விழா சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.