கோபியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரில் அவினாசி அத்திகடவு திட்ட குழுவின் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழா கட்சி சார்பற்றது என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் விழா மேடை மற்றும் விளம்பர பேனர்களில் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் படமும் இடம்பெற வில்லை.
அதே நேரத்தில் அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்ட நிலையில், விழா தொடர்பான நோட்டீசில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி,முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரது படங்கள் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய பொதெப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் பெயரை கூட குறிப்பிட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையனின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக கே.ஏ.செங்கோட்டையன் அளித்த விளக்கம் நேற்று முன் தினம் தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு முதல் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு உதவி ஆய்வாளர்கள் இரண்டு தலைமை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு, அவரை அனுமதிப்பது குறித்து முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தால் மட்டுமே அவர்களை போலீசார் அனுப்பி வருகின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.