திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு மற்றும் அம்பேத்கர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 500 கோடி வருமானம் ஈட்டுவோருக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டுமா என்பதை பாராளுமன்றத்தில் கேட்டோம்.
ஆனால் இதை மத்திய நிதியமைச்சர் நியாயப்படுத்தி பேசுகின்றார். ஏழை எளிய மக்களை குறித்து மத்திய பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. விலைவாசி உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவிக்கிறது.
ஆனால் இதனை ஒத்துக்கொள்ள நிதியமைச்சர் மறுக்கின்றார். மத்திய அரசின் தற்போதைய பட்ஜெட் டெல்லி மற்றும் பீகார் மக்களுக்கான பட்ஜெட் மட்டும் தான். அதில் டெல்லியில் வெற்றி பெற்றுள்ள பாஜக பீகாரில் வெற்றி பெறுவோம் என முழங்கிக் கொண்டிருக்கிறது.
பெரும் முதலாளிகளுக்கு 2.8 கோடியை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு சாதாரண மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய மறுக்கின்றது. மத்திய அரசு முழுக்க முழுக்க மேல் தட்டு மக்களுக்கான அரசு, பணக்காரர்களுக்கான அரசு என்பதை நன்றாகவே காட்டுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து இதனை நாம் எதிர்ப்போம். மீண்டும் நமது அரசு மத்தியில அமைய வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.