அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மூவர் படுகொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு குறவர் இன மக்களைக் காவலர்கள் அடித்து துன்புறுத்துவதாக அம்மக்கள் கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி வேதனையளிக்கிறது.
தமிழகத்தையே உலுக்கிய அச்சம்பவம் நடந்து மாதங்கள் பல கடந்தும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைத்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறையை ஏவி தங்கள் மீது படிந்துள்ள கறையைத் துடைக்க துடிக்கிறதா அண்ணா அறிவாலயம் அரசு?
முறையான சாட்சியங்கள் இருப்பின் சட்டத்தின் முன் சமர்ப்பிப்பதை விடுத்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி மிரட்டுவது ஏன்? ஒருவேளை இந்த வழக்கிலும் கழக உடன்பிறப்புகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ? அதனால் தான் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு?
புகார் கொடுப்பவர்களின் முழு விலாசத்தை வெளியிடுவது, குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவனாக இருந்தால் பஞ்சாயத்து செய்து பைசல் பண்ணுவது, செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு பாமர மக்களை அச்சுறுத்துவது போன்ற மாண்பற்ற செயல்களுக்கு, தமிழக காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்
என்ன பதில் சொல்லப் போகிறார்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.