இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2023 ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடுகளில் இருந்து 10 நாடுகள் பங்குபெற்றனர்.
இந்த தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9வது இடம்பிடித்து வெளியேறியது.
இந்த தொடரில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 55 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான நிலையில் தோற்றது.
இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடியாக இடை நீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி உத்தரவிட்டது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அந்த நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருக்கிறது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஐசிசி போட்டிகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படவில்லை.
மேலும் தற்போது நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இலங்கையிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்தது. முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும், அதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்த பின் அதன் மீதான தடை நீக்கப்பட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.