அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த நிலநடுக்கம் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.10 மணிக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு இந்தியா அதிக ஆபத்துள்ள மண்டலத்தில் அமைந்துள்ளதால் நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடியதாக இருந்தாலும், இரண்டு நிலநடுக்கங்களாலும் பெரிய இடையூறுகள் எதுவும் பதிவாகவில்லை.