மியான்மர் தேசிய மேலாண்மை ஆணையத்தின் செய்தி மற்றும் தகவல் பிரிவு மார்ச் 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 28ஆம் நாள் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில், இதுவரை 1007 பேர் உயிரிழந்தனர். 2389 பேர் காயமுற்றனர். 30 பேர் காணாமல் போயினர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதற்குப் பிறகு, சீனச் செஞ்சிலுவைச் சங்கம், மியான்மர் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு, 300 கூடாரங்கள், 2000 போர்வைகள், 600 மடித்து வைக்கக் கூடிய படுக்கைகள், பல்வேறு குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்யும் 2000 பொதிகள் உள்ளிட்ட அவசர உதவிப்பொருட்களை வழங்கியுள்ளது.
மேலும், மியான்மார் அரசின் வேண்டுகோளின்படி, மியான்மருக்கு 10 கோடி யுவான் மதிப்புள்ள அவசர மனித நேய உதவிகளை வழங்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
மார்ச் 29ஆம் நாள் அதிகாலை, சீனாவின் யுன்னான் மருத்துவப் பணிக்குழுவைச் சேர்ந்த 37 பணியாளர்கள் 112 தொகுதிகளான அவசரப் பொருட்களுடன் மியான்மரின் யாங்கோன் நகருக்குச் சென்றடைந்தனர். மியான்மரைச் சென்றடைந்த முதலாவது சர்வதேச மீட்புப் பணிக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.