சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை, காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டுச் சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட தகவல்களை வைத்து அந்த நாட்டிடம் விவரம் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். விபிஎன் சேவையைப் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதனையடுத்து, இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். அதன்பேரில், இன்டர்போல் தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. இதில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ -மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை அமைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.