சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் அண்மையில், சர்வதேச தொழில் மற்றும் வணிக துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து பேசினார். ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவரும், தலைமை இயக்குநருமான ரோலண்ட் புஷ் இச்சந்திப்பில் பங்கெடுத்தார்.
சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்த போது அவர் கூறுகையில், இந்தச் சந்திப்பு எங்களுக்கு ஊக்கமளித்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். சீன வளர்ச்சிக்குப் பங்காற்ற விரும்புகிறோம் என்றார். அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு குறித்து அவர் கூறியதாவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்தில், அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வளரும் நாடுகளுக்கு இது நலன்களை வழங்கியதோடு, வர்த்தகத்தையும், சந்தைகளின் திறப்பையும் முன்னேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், உலகளவில் மாபெரும் புத்தாக்கத் திறன் கொண்ட சந்தைகளில் ஒன்றாக சீனா திகழ்கிறது. உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை சீனா விரிவுபடுத்துவது, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று கூறிய அவர், சீனாவின் எதிர்கால வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.