முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: வானதி சீனிவாசன்!

Estimated read time 1 min read

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றது. பொருளாதார நெருக்கடி நிலை என பல்வேறு இடர்பாடுகள் நிறைந்த காலத்தில் பதவி ஏற்றார். 11 ஆண்டு என்ற குறைந்த காலத்தில் இந்தியா அடைந்துள்ள உயரம் பிரம்மாண்டமானது.

அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற மோடியின் திட்டத்தால் மிகப் பெரிய மாற்றம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.6 ஆயிரம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்கள் நேரடியாக செல்கிறது. இடைத்தரகர்கள், ஆளுங்கட்சியினர் உதவி என்பது பெருமளவு மாறி உள்ளது. ‌ இதில் பெருமளவு பயனடைந்தவர்கள், ஏழை எளியவர்கள் தான்.

பகல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பயங்கரவாத கொலைகள் தடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்கட்டமைப்பு வசதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கப்பட்ட பகுதி போல இருந்தன. ஆனால் இன்றைக்கு போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ளன.

கடந்த 11 ஆண்டு பாஜக ஆட்சியில் 2045 மருத்துவக் கல்லூரிகள், 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 16 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத்தில் அதிக பலன்‌ பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக சுயதொழில் துவங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கீழடி விவகாரத்தில் அரசியல் செய்துகொண்டிருப்பது திமுகவும், கம்யூனிஸ்ட்டும்தான். ஆதிச்சநல்லூர், கீழடியை விட தொன்மையான இடம் .அங்கு மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இதுபோன்று பேசுவதுதான் இவர்களின் வேலை.

ஒரு தேசிய கட்சியில், தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் எல்லோரும் சொல்ல வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தே என்று சொல்லி உள்ளார். இதனை பூதாகரமாக்க வேண்டாம். நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தபோது, கூட்டணியை அறிவித்தபோது தேசிய ஜனநாய கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். இதில் எவ்வித குழப்பமும், மாற்றுக் கருத்தும் இல்லை. கூட்டணி அரசு மற்றும் கூட்டணி அமைச்சரவை தொடர்பாக தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் தமிழ்நாட்டுக்கும். தமிழ்நாட்டுக்கு பாஜகவுக்கு தனி யூனிட் கிடையாது. பாஜகவுடன் வரும் தேர்தலை சந்திக்க, ஒரு கட்சியல்ல, பல கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அதனை இப்போது சொல்ல முடியாது.

ஒரு சில திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் நடத்த முடியும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளதா என்று எங்காவது ஸ்டாலின் சொல்லி உள்ளாரா? இது குறித்து தெரிவித்ததும், மாப்பிள்ளை அவருக்கு ஞாபகம் வந்துவிட்டார். அவருக்கு மாப்பிள்ளை தான் எல்லாமே என்பது எங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இன்றைக்கு மதுரைக்கு அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஒற்றை செங்கலை காட்டியும், நீட்டை ரத்து செய்வதாக கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது. இமயமலையில் குன்றின்மேல் முருகன் கோயில் உள்ளது. அமர்நாத் யாத்திரை மட்டுமல்ல, காசிக்கும் தமிழர்கள் அதிகம் செல்கின்றனர். கோயிலுக்கு அதிகம் செல்பவர்கள் தமிழர்கள் தான்.

மாநகராட்சி குப்பைகள் அகற்றுவதில் மோசமான நிலை உள்ளது. கோவையில் தான் இந்த நிலை என நினைத்தேன். ஆனால், திருப்பூரில் அதைவிட மோசமான நிலை உள்ளது. கழிவுகளை அகற்றுவதில் அறிவியல் பூர்வமாக அணுகுவதில் தமிழகம் தோல்வி அடைந்துள்ளது. பல்வேறு அமைப்புகள் புதிய தொழில்நுட்பத்துடன் குப்பைகளை அகற்ற முன் வந்தாலும் தமிழ்நாட்டை திமுக இன்னும் குப்பை கிடங்காகவே வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author