2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டில் பங்கேற்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவைச் சென்றடைந்தார்.
அன்று மாலையில், கஜகஸ்தான் அரசுத் தலைவர் காசிம் ஜோமார்ட் டோகாயேவுடன் ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாட்டுறவின் நிலைப்புத் தன்மை மற்றும் நேர்மையான ஆற்றல் ஆகியவற்றின் மூலமாகவே, பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக பங்களிப்பை வழங்குவதற்காக கஜகஸ்தானுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.
மேலும், சீனாவும் கஜகஸ்தானும் தேசிய வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியின் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், இரு நாடுகளும் முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீனாவுடன் இணைந்து பரஸ்பர நம்பிக்கையையும் அனைத்து துறைகளிலும் உள்ள பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பையும் ஆழமாக்க கஜகஸ்தான் தயாராகிறது. இரு தரப்பும் வர்த்தகம், முதலீடு, தொழிற்துறை, வேளாண்மை, எரிசக்தி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும் என்று டோகாயேவ் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுங்கத்துறை, சுற்றுலா, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 10க்கும் அதிகமான ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன.