அன்புமணி தலைமையில் இன்று சேலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 2 எம்.எல்.ஏக்கள் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அண்மைக்காலமாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பலக்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதற்கிடையில், ராமதாஸ், தமிழகம் முழுவதும் ஒங்காக செயல்படாத மற்றும் பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார்.
அதன்படி இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களில் 60 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 39 மாவட்ட தலைவர்களை அவர் மாற்றியுள்ளார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் கடந்த 15-ம் தேதி முதல், உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்தவகையில் இன்று காலை 10 மணிக்கு சேலம் மாவட்டத்திலும், பிற்பகல் 3 மணிக்கு தருமபுரி மாவட்டத்திலும் கூட்டம் நடக்கிறது.
பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் தீடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும் பாமக கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி நெஞ்சுவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையிலும் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அன்புமணி தலைமையில் நடைபெறும் சேலம் மற்றும் தருமபுரி கூட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.