மதுரையிலிருந்து குற்றாலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து குற்றாலம் குற்றாலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. 55 பயணிகளுடன் சென்ற அந்த அரசுப் பேருந்து, தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென தனியே கழன்று ஓடியது. இதனால் பேருந்தின் பின்பக்கம் அப்படியே சாலையில் வேகமாக இடித்து இழுத்தவாறு சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 3 பள்ளி மாணவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்பக்க சக்கரத்தின் அச்சாணி முறிந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் மதுரையில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி இருப்பதாகவும், பணிமனையில் இருந்து பேருந்துகள் சோதனை செய்யப்படாமல் எடுத்துவரப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அரசுப் பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.