சாமான்யர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விண்ணும் மண்ணும் நூல் அறிமுகம்:

Estimated read time 1 min read
சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’

‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும் முதல்கட்டுரையில் சந்திராயன்-1 வெற்றிகரமாகச் செயல்பட்டதை விவரிக்கின்றார் விஞ்ஞானி அண்ணாதுரை.
உலகில் பல நாடுகள் 69-முறை நிலவை ஆராய்ந்துவிட்டு அங்கு நீரில்லை, காற்றில்லை என்று கூறி ஓய்ந்துவிட்ட நேரம், நிலவின் துருவப்பகுதியில் ஆய்வு நடத்தி ‘நிலவில் நீருண்டு’ என்று நிரூபித்ததால் தான் உலகின் பார்வையில் இந்தியாவின் சந்திராயன்-1 புகழ் பெற்று நிற்கிறது.
தொடர்ந்து பல நாடுகள் பல முறை செவ்வாய் கிரகத்தில் செலுத்திய விண்கலன்கள் தோல்விகண்டு நின்றபோது, முதல் முறையிலேயே மங்கள்யானை வெற்றிகரமாகச் செலுத்திய தேசமாக இந்தியா திகழ்ந்ததையும் சிறப்பாகச் சொல்லியுள்ளார் விஞ்ஞானி அண்ணாதுரை.
இந்த இரண்டு திட்டங்களின் தலைவராக இருந்து வழிகாட்டிய அவரே எழுதியுள்ள இந்நூல் சிறப்பான தகவல்களைத் தருகின்றது.
‘கலாமின் நினைவுகளுடன்’ கட்டுரை
மேதகு. அப்துல்கலாம் அவர்கள் நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தந்த ஊக்கத்தைக் காட்டுகின்றது. சந்திராயன்-2 மூலம் இந்திய விஞ்ஞானிகள் பெற்ற அனுபவத்தை ‘விக்ரம் அனுபவப் பாடங்கள்’ அழகாக எடுத்துரைக்கிறது.
‘மிஷின் சக்தி ஏன்? எதற்கு?’ என்பதை இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு தெளிவாக்கியுள்ளார். அலைபேசி, ஏ.டி.எம், விமானப் போக்குவரத்து, வானிலை, இயற்கைச் சீற்றம், நாட்டின் பாதுகாப்பு என்று இரவும், பகலும் நமது நாட்டின் செயற்கை கோள்கள் கண்காணிக்கின்றன.

இவைகளுக்கு எதிரிநாடுகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு உருவாகும்.

எனவே, இந்தச் செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா நான்காம் இடம் பெற்றுத் திகழ்கிறது.

இதற்கான ஆக்க சக்தியே ‘மிஷன் சக்தி’ என்பதைச் சொல்லி, ஏவுகணை உருவாக்கத்தில் ‘நிர்பய் சோதனை’ ஒரு மைல்கல் என்றும் அருமையாக விளக்குகின்றார்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் விரைவில் நமது விஞ்ஞானிகளால் செயற்கை இதயமும் கிடைக்கும் என்பதை ‘முப்பரிமாண அச்சு’ மூலமும், தடையில்லா மின்சாரமும் சாத்தியமே என்பதை ‘மிகை மின் கடத்தல்’ கட்டுரை மூலமும் விளக்கிச் சிலிர்ப்பூட்டுகின்றார் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு.
‘மண்ணும்’ என்கின்ற இரண்டாம் பகுதியில், தனது சொந்த கிராமமான கோதவாடிக் குளத்தில் நீர் மட்டம் குறைந்து போனதைச் சொல்லி நீர் மேலாண்மையில் நாம் பயணிக்க வேண்டியதன் தேவையை எடுத்துச் சொல்லுகின்றார் விஞ்ஞானி அண்ணாதுரை.
தொடரும் ‘வான் பயணமும், மண் வாழ்வும் – பாரதியின் பார்வையில்’ என்ற தலைப்பில் பாரதியின் தொலைநோக்குப் பார்வையை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி ‘பாரதியே ஒரு விஞ்ஞானி’தான் என்பதை உணர வைக்கின்றார்.
பாரதியை மிக ஆழமாகப் புரிந்து, தெளிந்து எழுதியுள்ள இக்கட்டுரை விஞ்ஞானி அண்ணாதுரை அவர்களின் தமிழ் ஆர்வத்தையும், பாரதி மீது கொண்டுள்ள பற்றையும் சிறப்பாகச் சொல்லுகின்றது.
பாரதி சொன்னதுபோல, ‘இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’, ‘திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்’ என்ற வரிகளுக்கு இந்த நூலாசிரியர்களின் நூல் ஒரு சான்றாக அமைகின்றது.
‘அச்சம் தவிர்’ என்பதை எடுத்துகாட்டி எல்லா வகை அச்சங்களையும் தவிர்த்துச் சாதனை படைக்க வழிகாட்டுவதோடு, பள்ளிக்கல்வியும், அரசுப்பள்ளிகளும்’ என்ற கட்டுரை வழியாக சாதனை படைக்கும் நமது விஞ்ஞானிகள் 90% பேர் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள் தான் என்பதை அருமையான உதாரணங்களுடன் உரக்கச் சொல்லியுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.
அப்துல் கலாமின் நினைவுகளைக் கொண்டாடப் ‘பறந்துபோன அக்னிச் சிறகுகள்’ மூலமும், தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான சிறப்பான காரணங்களையும் பாங்குற தன் அடுத்த கட்டுரையில் எழுதி தமிழை நேசிக்க, சுவாசிக்க, வாசிக்க அழைக்கின்றார் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு.
நூலாசிரியர் மயில்சாமி அண்ணதுரை அவர்களது நேர்காணல்கள் இன்றைய சாமான்ய மக்களின் பல கேள்விகளுக்குச் சிறப்பான பதில்களை வழங்குகிறது.
தற்போது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத்தலைவராகப் பணியேற்ற பின்பு அம்மன்றம் ஆற்றிவரும் அறிவுசார் தொழில்நுட்பங்கள் எதிர்காலத் தமிழகத்திற்கு வளமூட்ட உள்ளன என்பதையும் நேர்காணலின் பதில்கள் விளக்குகின்றன.
விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டலுடன் உற்பத்தி செய்ய வழிகாட்டுதல். நீராதாரங்களின் வழித்தடங்களை ஆய்வு செய்தல், விளைப்பொருட்களைப் பதப்படுத்தலில் மேலும் பல ஆய்வுகள் தொடர்வதை நேர்காணலில் விவரிக்கின்றார் மயில்சாமி அண்ணாதுரை.
விண்ணை நோக்கிப் பாயும் செயற்கைக் கோளையும், மண்ணை வெளிக்காட்டும் வான்புகழ் வள்ளுவரையும் அட்டையில் கொணர்ந்து ‘விண்ணும் மண்ணும்’ நூலை விழிப்பூட்டும் நூலாக வடிவமைத்துள்ளார்கள் நூலாசிரியர்கள்.
முழுமையாகச் சொல்ல வேண்டுமெனில் ‘விண்ணும் மண்ணும்’ ஒரு அர்த்தமுள்ள அனைவரும் படித்துப் பயன்பெற நம் மொழியோடு கூடிய விஞ்ஞான அறிவைப் பெற மிகச்சிறந்த நூல்.
ஒவ்வொரு மாணவரும், இளைஞரும், இவர்களை வழிகாட்டும் பெற்றோரும், ஆசிரியரும் படிக்கவேண்டிய நூல். அறிவியல் தமிழுக்கு இந்த இரண்டு விஞ்ஞானிகளும் பல நூல்களை வழங்கியுள்ளார்கள்.
அந்த வரிசையில் ‘விண்ணும் மண்ணும்’ ஒரு புதிய நட்சத்திரமாக ஜொலித்து விண்ணையும், மண்ணையும் அழகாகச் சுட்டுகின்றது என்றால் இது முற்றிலும் உண்மையே. ‘விண்ணும் மண்ணும்’ நம் கைகளில், இல்லத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே.
டாக்டர். மெ. ஞானசேகர்,

ஆசிரியர், ஆளுமைச் சிற்பி மாத இதழ்,

கல்வியாளர் மற்றும் எழுத்தாளர், சென்னை.

*******
நூல்: விண்ணும் மண்ணும்

ஆசிரியர்கள்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை,

ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு

வெளியீடு: முரண்களரி / திசையெட்டு

விலை: ரூ. 150/-

9113513768,

thizaiyettu@gmail.com

#VinnumMannumbookReview #scientistvDillibabu #VinnumMannum #மயில்சாமிஅண்ணாதுரை #விடில்லிபாபு #விண்ணும்மண்ணும்நூல் #டாக்டர்மெஞானசேகர் #சந்திராயன் #மங்கள்யான் #அப்துல்கலாம் #செயற்கைக்கோள் #ஏவுகணை #MylswamyAnnadurai #apj #abdulkalam

The post சாமான்யர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விண்ணும் மண்ணும் நூல்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author