ஆவணங்கள் இல்லாமல் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் அகதிகளை வெளியேற அந்நாடு கட்டாயப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தானின் காபந்து வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியைச் சந்தித்தார்.
இந்த நிலையில், அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், சரியான ஆவணங்கள் இல்லாமல் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடுவை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.
டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு அல்லது மூன்றாவது நாட்டில் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் முடிக்க ஆப்கானிஸ்தான் அகதிகளை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாடு கூறியுள்ளது.