தமிழ் சினிமா உலகில் நடிப்பில் சிவாஜி – எம்.ஜி.ஆர், பின்னர் ரஜினி – கமல், தற்போது அஜித் – விஜய் என இரட்டை துருவங்கள் எப்போதும் பேசப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ் பாடலாசிரியர்கள் வரலாற்றிலும், கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் இருவரும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கவிதை, இசை, அர்த்தம் நிறைந்த பாடல்களால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர்கள்.
அதுவும் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த திரைப்படங்களில் பாடல்களை எழுதுவதன் மூலம், அவர்கள் புகழின் உச்சியை எட்டினர். இதில் முக்கியமாக, பாசத்துக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது மீண்டும் இணையத்தில் பேசப்படுகின்றது.
‘நெஞ்சிருக்கும் வரை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு” என்ற பாடலை முதலில் கண்ணதாசனே எழுதுவதாக இருந்தது. ஆனால், அச்சமயம் அவரது உறவினர் ஒருவர் மறைவடைந்த காரணத்தால், அவர் எழுத முடியாமல் இருந்தார்.
அந்த நிலையில், வாலியை நேரடியாக அணுகிய கண்ணதாசன், “இந்த பாடலை நீ எழுதிவிடு, பணம் கேட்காதே… ஸ்ரீதரிடம் நான் நேரில் பேசுகிறேன்” என கூறி, பணத்தையும் அவர் வழங்குவதாக உறுதி செய்துள்ளார். இதனையடுத்து, வாலி அந்தப் பாடலை எழுதி கொடுத்ததாகவும், இதன் மூலமாக ஸ்ரீதர் இயக்கும் படங்களில் வாலிக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஒரு பழைய நேர்காணலில் வாலி பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்வு, இருவருக்கும் இடையே இருந்த பரஸ்பர மரியாதை, நட்பு மற்றும் தமிழ்ப்பாடலின் தரத்திற்காக கொண்டிருந்த பற்று ஆகியவற்றை எடுத்துச் சொல்கிறது. இவர்கள் நட்பு, இன்று திரைத்துறைக்கே ஒரு பாடமாகும் அளவுக்கு மக்களின் நினைவில் நிலைத்திருக்கிறது.