எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் எங்களோடு சேர்த்து கொள்ளமாட்டோம் என ஈபிஎஸ் பேட்டிக்கு தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026ல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும். பாஜக ஒரு தேசிய கட்சி.
அது பல மாநிலங்களை ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சொந்த பலம் உள்ளது. ஆகையால் பாஜகவையும் தவெகவையும் ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்.
தவெகவுடன் கூட்டணி என்பதெல்லாம் எங்கள் தேர்தல் உத்திகள் மற்றும் தந்திரங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியாது” என்றார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன், “எங்கள் நிரந்தர எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் எங்களோடு சேர்த்து கொள்ளமாட்டோம், தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனை கதையை சொல்லி வருகிறார்கள். செயற்குழு தீர்மானத்தின்படி முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான், விஜய் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார்.