பிரதமர் வருகையின்போது, கவனித்த சில ஆச்சர்யங்கள்:
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை திறப்பதற்காக பிரதமர் மோடி வந்தபோது, பெரும்பாலும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரங்கள் பற்றியும், இனிமேல் வழங்க இருக்கும் நிதி குறித்தும் வழக்கமான பாணியிலேயே பேசினார்.
அங்கிருந்து கிளம்பி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வரும் வழியிலேயே சாலை ஓரத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கை காட்டியபடி மோடி ரோட் ஷோ காட்டியதை அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கவில்லை.
இத்தனைக்கும் திருச்சியில் காங்கிரஸ்காரர்கள் பிரதமர் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி கைதான நிலையில்தான், இந்த ரோட் ஷோ நடந்தேறியிருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட தொன்மையான கோவிலுக்குள் சென்று வணங்கியபோது, கோவில் ஆச்சாரப்படி அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அங்குள்ள கண்காட்சியைப் பார்த்துவிட்டு மதிய வேளையில், மேடைக்கு வந்ததும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.
‘நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்ற “ஓம்” என்று துவங்கும் சமஸ்கிருதப் பாடலை இளையராஜாவின் குழுவினர் இடம் பொருள் ஏவல் பார்த்து இசைக்க, அந்தப் பாடலை மெலிதாக கைத்தட்டி ரசித்த மோடி, பாடல் முடிந்ததும் எழுந்து நின்று, இளையராஜாவிற்கு வணக்கம் சொன்னபோது ஒரே கரகோஷம்.
அடுத்து திருப்புகழ். டி.எம்.எஸ்-ஸின் “முத்தைத்தரு பத்தித் திருநகை” தமிழ்ப் பாடலை பாடி முடித்த கையோடு, திருவாசகத்தின் அழகிய வரிகளை சிம்பொனி இசையுடன் பிணைத்து வழங்கியபோது, அதற்கு கூட்டத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு.
இசை நிகழ்ச்சி முடியும்முன்பு, அவருடைய வழக்கமான இயல்புபடி ஆன்மீக மயமான தன்னுடைய பேச்சை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் இளையராஜா.
நிறைவாக வெயில் ஏறிய நேரத்தில், பேச வந்தார் பிரதமர் மோடி. பிரதமர் கலந்துகொண்ட அதே விழாவில், பல ஆதீன மடாதிபதிகள் கலந்து கொண்டார்கள். கூடவே ஆச்சர்யமாக கலந்து கொண்டவர் தொல் திருமாவளவன்.
“தொகுதி எம்.பி. ஆக இந்த விழாவில் கலந்து கொண்டேன்” என்று சொன்னவர், பிரதமரின் வருகைக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
வழக்கமாக பேசுகிறபடியே தமிழில் சில வார்த்தைகளை சிரமப்பட்டு பேசிய பிறகு, தன்னுடைய உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, ராஜராஜ சோழனைப் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டிய ராஜேந்திர சோழனைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார்.
கடல் தாண்டி தன்னுடைய நிலப்பரப்பில், விஸ்தரித்த ராஜேந்திர சோழனை தற்போதைய பாரதத்துடன் இணைத்துப் பேசினார்.
சோழர் காலத்திலேயே மக்கள் வாக்களிக்கும் ‘குடவோலை முறை’ இருந்ததைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்டமான சிலையை அமைக்க இருப்பதாக அவர் தெரிவித்தபோது, பலமான கைத்தட்டல் எழுந்தது. நிறைவாக சமீபத்திய ஆபரேசன் சிந்தூரைப் பற்றி அவர் குறிப்பிட்டதும் மறுபடியும் கைத்தட்டல் எழுந்தது.
சோழர் காலத்தில் நிலவிய குடவோலை முறையை பற்றியெல்லாம் பெருமையாகப் பேசியிருக்கிற பிரதமர் மோடி, இனி விரைவில் நடக்க இருக்கிற பீகார் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் ஓட்டுப் பதிவு எந்திரத்தைவிட சோழர் காலத்திலிருந்தே நீடித்து வருகிற வாக்குச்சீட்டு மூலம் மக்கள் வாக்களிக்கும் முறையை மீண்டும் ஜனநாயக ரீதியாக நடைமுறைப் படுத்துவாரா? என்பதுதான் அந்த விழாவில் கலந்து கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.
– யூகி
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுபொருளாக மாறிய திருமா!
