18 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வலம் வர உள்ளன.
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் எனப்படும் இரட்டை மாடி பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை நகரில் தற்போது தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் டபுள் டக்கர் பேருந்து விரைவில் இயக்கப்பட உள்ளது. 1970 காலகட்டங்களில் இரட்டை அடுக்கு பஸ்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டன. சுமார் 10 ஆண்டுகள் இந்த பஸ்கள் சென்னையில் ஓடின.
பின்னர் 1980 காலகட்டத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997 ஆம் ஆண்டில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மேம்பால பணிகள் உள்ளிட்டவை காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் இந்த பேருந்து சேவை நிறுத்தபட்டது. கடைசியாக உயர்நீதிமன்றம் – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் இந்த பேருந்து இயக்கப்பட்டது.
அதன்பிறகு இதுவரை சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை இரட்டை அடுக்கு பேருந்துகள் வழக்கமான பயணிகள் பயணத்துக்கும், சுற்றுலா பயணத்துக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் வார நாட்களில் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் உயரம் அதிகம் என்பதால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை நகர சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பேருந்துகள் இயக்கப்படும் எனவும் வழித்தடம் திட்டமிடல் மற்றும் கட்டண நிர்ணயம் ஆகியவை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது . தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் சென்னை மாநகர சாலைகளில் சோதனை ஓட்டமும் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது.
சாதாரண மின்சார பேருந்துகளை விட 1.5 மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் வண்ணம் மாடி பேருந்துகளில் இருக்கைகள் அமைய உள்ளன.