நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரரும், அப்போலோ 13 பயணத்தின் தளபதியுமான ஜேம்ஸ் “ஜிம்” லோவெல், 97 வயதில் இல்லினாய்ஸ் மாநிலம் லேக் ஃபாரஸ்டில் காலமானார்.
1962-ல் நாசாவில் இணைந்த அவர், ஜெமினி 7, ஜெமினி 12, அப்போலோ 8, அப்போலோ 13 ஆகிய நான்கு விண்வெளிப் பயணங்களில் பங்கேற்று 715 மணி நேரத்துக்கும் மேலாக விண்வெளியில் பயணம் செய்தார்.
1970-ஆம் ஆண்டு அப்போலோ 13 பயணத்தின் போது, ஆக்ஸிஜன் தொட்டி வெடிப்பு காரணமாக நிலவில் தரையிறங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அப்போது லோவெல் தனது குழுவினருடன் சேர்ந்து மிஷன் கன்ட்ரோல் மையத்துடன் ஒருங்கிணைந்து, நிலவு தொகுதியை ‘வாழ்க்கை படகாக’ மாற்றி அனைவரையும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பச் செய்தார்.
“Houston, we’ve had a problem” என்ற வரலாற்றுச் சொற்றொடருக்கு பின்னால் இருந்த அந்த அனுபவம் Lost Moon என்ற புத்தகமாகவும், பின்னர் டாம் ஹாங்க்ஸ் நடித்த Apollo 13 திரைப்படமாகவும் வெளிவந்தது.
நாசா மற்றும் உலகத் தலைவர்கள், லோவெலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். “ஜிம் லோவெலின் துணிச்சலும் உறுதியும் ஒரு சோகத்தை வெற்றியாக மாற்றியது” என்று நாசா இடைக்கால நிர்வாகி சீன் டஃபி புகழ்ந்தார்.
அப்போலோ காலத்தில் நிலவுக்குப் பறந்த 24 பேரில் தற்போது உயிருடன் இருப்போர் ஐந்தே பேர்; அவரின் சாதனைகள் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு என்றும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.