உலகில் வாழும் உயிரினங்களின் இதயத் துடிப்புக்கும் ஆயுட்காலத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வேகமாகத் துடிக்கும் இதயம் கொண்ட உயிரினங்களுக்கு ஆயுள் குறைவு; மெதுவாகத் துடிப்பவர்களுக்கு ஆயுள் அதிகம். இந்த அடிப்படையில், ஆறறிவு கொண்ட மனித இனத்தின் ஆயுட்காலம் சராசரியாக 120 ஆண்டுகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், பெரும்பாலான மனிதர்கள் அதற்கு முன்னரே மரணமடைகின்றனர். கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பல நாடுகளில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில், ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாகவும், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆயுட்காலம் 83 ஆண்டுகளாகவும் உள்ளது.

அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் சராசரி ஆயுட்காலம் 64 ஆண்டுகள் மட்டுமே (நைஜீரியா 53 ஆண்டுகள்). இந்தியாவில், 1960களில் 46 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 67 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மனிதனின் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்கும் தீவிர ஆய்வில் சீன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். லான்வி பயோசயன்சஸ் (Lanvi Biosciences) என்ற சீன நிறுவனம் ‘ஆன்டி ஹிங்’ (Anti HING) எனப்படும் முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை உருவாக்கி வருகிறது. திராட்சை விதைச் சாற்றில் இருந்து உருவாக்கப்படும் இந்த மாத்திரைகளை எலிகளுக்குச் செலுத்தி ஆய்வு செய்தபோது, அதன் ஆயுட்காலம் அதிகரித்தது கண்டறியப்பட்டது.

இந்த மாத்திரைகள் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களைக் (சோனி செல்கள்) காப்பதுடன், அதேசமயம் வயதான செல்களைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், ஆயுட்காலம் நீடிக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.
இந்த மாத்திரைகளை மனிதர்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மருந்துடன், சரியான வாழ்க்கை முறை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையும் இருந்தால், மனிதர்கள் 150 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியும் என்று லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் உறுதியளிக்கிறது. இது உலக அளவில் மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
