கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கை கொடுத்து காப்பாற்ற ஒருவர் இருந்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் ஆசை.
அப்படி ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் ? அவர் தான் நரசிம்ம மூர்த்தி. மஹாவிஷ்ணு அவதாரத்திலேயே குறைந்த நிமிடங்களே தோன்றி தன் பக்தனுக்காக அருள் புரிந்த அற்புத தெய்வம். தக்ஷிண அகோபிலம் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தியின் திருக்கோயில் பற்றி இப்போது பார்ப்போம்….
முதன்முதலில் நரசிம்மர் அவதாரம் அகோபிலத்தில் நிகழ்ந்தது. மீண்டும் அவர் அவதாரம் எடுத்த திருத் தலமே கீழ்ப் பாவூர் ஆகும். தென்காசிக்கு அருகில் சுரண்டை செல்லும் வழியில் அமைத்திருக்கிறது இவ்வூர்.
கிருத யுகத்தில், பிரகலாதனுக்காக, மஹாவிஷ்னு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். 24 நிமிடங்களே இந்த அவதாரம் நிகழ்ந்தது . எனவே , காசியபர், நாரதர், உள்ளிட்ட முனிவர்கள், ரிஷிகள் நரசிம்மரை காண விரும்பி திருமாலை வேண்டினார்கள்.
பொதிகைமலை சாரலில், மணிமுத்தா தீர்த்தத்தில் நீராடி , சித்ரா நதிக்கரையில் தவம் செய்ய அறிவுறுத்திய திருமால், அங்கே தாம் காட்சியளிப்பதாக வரமளித்து மறைந்தார். ரிஷிகளும் திருமால் சொன்னதுபோல் தவம் மேற்கொண்டனர் .
அந்த தவத்தின் பயனாக நரசிம்மர் தன் தேவியருடன் மீண்டும் அவதாரம் செய்து, ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் காட்சி கொடுத்த ஊரே கீழப் பாவூர்.
இங்கே காட்சிக் கொடுத்ததோடு மட்டுமின்றி இவ்வூரிலேயே நிரந்தரமாக தங்கியும் விட்டார் என்பதே இக்கோயிலின் தலவரலாறு.
1100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கீழப் பாவூர் நரசிம்மர் திருக்கோயில் தலம் மூர்த்தி தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புக்கள் கொண்டது.
இந்த கோயிலில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் நரசிம்மரை வழிபட்டால், கைமேல் பலன் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள்.
இரு கைகளால் இரணியனைப் பிடித்து, தன் மடியில் கிடத்தி, நான்கு கைகளால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கைகளால் குடலை உருவி மாலையாக பிடித்து, மீதமுள்ள எட்டுக் கரங்களில் ஆயுதங்களைத் தங்கி மகா உக்ர மூர்த்தியாக ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.
கருவறையில் உள்ள நரசிம்மர் மிகுந்த உக்கிரமாக இருந்ததால் ஊரே தீப்பற்றி எரிந்ததால், சிவபெருமானே சரப மூர்த்தியாக வந்து நரசிம்மரை அனுப்பி நரசிம்மரை சாந்த படுத்தியதாக கூறப்படுகிறது.
300 ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த கோயிலில் மாலை வேளைகளில் சிம்ம கர்ஜனை கேட்கும் என்று சொல்லப்படுகிறது.
இப்போதெல்லாம் நரசிம்மர் சாந்த சொரூபமாகி விட்டார் என்றும், அதன் காரணமாகவே சுவாமியின் மார்பில் லட்சுமி பிரஷ்ட்டை செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இக்கோயிலில், வைகுண்ட ஏகாதேசியில் ,புரட்டாசி சனிக்கிழமைகளில், பிரதோஷ நாட்களில், மாதம் தோறும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவருகின்றன. இது மட்டுமில்லாமல், சுவாதி, திருஒணம் நட்சத்திர நாட்களில், பிரதோஷ நாட்களில், வாரம் தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் தீர்த்த வல வழிபாடு நடத்தப் படுகிறது.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் நரசிம்மரை முறையாக விதிப்படி வழிபட்டால்,எதிரிகளின் சூழ்ச்சிகளை வென்று அரசாளும் யோகம் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.
கருவறைக்கு எதிரே உள்ள கங்கை நர்மதை நரசிம்ம புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடினாலோ, அல்லது இந்த புனித தீர்த்த நீரைச் சிரத்தில் தெளித்துகொண்டாலோ கவலைகள் எல்லாம் நீங்கி மனதில் அமைதி ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.
இந்த கோயிலுக்கு செவ்வாய், சனி, புதன்கிழமைகளில் மாலை வேளைகளில் வந்து தீர்த்தமாடி, கன்னிமூலை கணபதியை வணங்கி பின், பானகம் படைத்து வணங்கினால், நரசிம்மரின் முழு அருளுக்கும் பாத்திரமாகலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
மேலும் இந்த நரசிம்மரை வழிபட்ட பிறகு, அருகில் இருக்கும் சிவகாமி அம்மை உடனுறை வாலீஸ்வரரையும் வணங்கினால் தான் நரசிம்ம வழிபாடு முழுமை பெறும் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு அற்புதமான திருக்கோயிலுக்கு சென்று மகா நரசிம்மரை வணங்கி நலம் பெறுவோம்…!