படிப்பு ஒன்னும் பெரிசா இல்லை.. வறுமை ஒரு பக்கம் பிச்சு திண்ண, கிடைத்த வேலையை செய்திருக்கிறார்.. விவசாயம் பார்த்தார்.. மாடு மேய்த்தார்.. மாம்பழம் விற்றார்.. உப்பள தொழில் செய்தார்.. இப்படி 17 வகையான வேலை பார்த்துள்ளார்.. ஆனாலும் கையில் காசு தங்கவில்லை..
பிறகுதான், சென்னைக்கு கிளம்பி வந்து வாய்ப்பு தேடி, அதில் வெற்றியும் பெற்றார். மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார்தான்!
‘நாடோடி மன்னன்’ படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்கிறார் எம்ஜிஆர். யார் யாரையோ வைத்து பாட்டு எழுதுகிறார்.. ஆனாலும் திருப்தி இல்லை. கடைசியில் பட்டுக்கோட்டையாரிடம், “உன்கிட்ட பாட்டு இருந்தா குடு கல்யாணம்” என்று கேட்டதுமே, ஒரு பாட்டை நீட்டுகிறார்.
அதில், “சும்மா கிடந்த நிலத்தை” என்று ஆரம்பித்து, “தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது, சிந்திச்சு முன்னேற வேணுமடி” என்ற வரிகளைப் படித்துப் பார்த்தார் எம்ஜிஆர்…
பிறகு சிரித்துகொண்டே, “நீ ரொம்ப விவரம் கல்யாணம்.. என் காசுல உன் கட்சி கொள்கையை எழுதிடலாம்னு பார்க்கிறியா?” என்று கிண்டலாக கேட்டார்.
ஆனால் கடைசிவரை எம்ஜிஆர் இந்தக் கவிஞனை மறக்கவே இல்லை.. “என்னுடைய நாற்காலியில் நான்கு கால்களில் 3 கால்கள் யாருடையது என்று எனக்கு தெரியாது.. ஆனால், அதில் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது” என்று புகழ்ந்து கொண்டே இருந்தார்.
சென்னையில் ஒருநாள் இவர் பஸ்ஸில் போயிட்டிருந்தார்.. அப்போது வழியில் ஓர் இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பழுது பார்க்கும் வேலை நடந்துள்ளது.. அதனால், சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது…!
அதை பார்த்த கல்யாணசுந்தரம் அருகிலிருந்தோரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.
பாடல் எழுத தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்று தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாட்டு எழுதுவாராம்.. பாரதிதாசன் தலைமையில்தான் இவருக்கு கல்யாணமும் நடந்துள்ளது.
அன்றைய தினம், பக்தி, காதல், வீரம், என்றிருந்த சினிமா பாடல்களுக்கு நடுவில், புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றினார்.
இவர் சொல்லாத தத்துவம் கிடையாது.. சொல்லாத அறிவுரை கிடையாது.. எழுதாத காதல் கிடையாது.. மொத்தத்தில் அவர் இல்லாமல் தமிழே கிடையாது என்ற நிலை உருவானது!
ரொம்ப சிம்பிளான வார்த்தைகளை வைத்துதான் பாட்டு எழுதினார்.. ஆனால் அவைகளில், இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என அனைத்தையும் வஞ்சனையில்லாமல் நிரப்பி நிரப்பி தந்தார்..!
இவரது ஒவ்வொரு பாட்டும் தமிழகத்தின் தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன – நேசிக்கப்பட்டன.
“குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா” என்று அறுதியிட்டு சொன்ன தீர்க்கதரிசி!! “இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிற வேலை இருக்காது” என்று வர்க்க அரசியலை பேசிய மகான்!
இவரது ஒவ்வொரு வரிகளும் சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைந்தது.. தனி மனித தன்னம்பிக்கையை உயர்த்தி பிடித்தது.. முதலாளித்துவத்தை வார்த்தைகளாலேயே குத்தி குத்தி கிழித்தது.
“கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே, நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே” என்று இவர் எழுதிய காதலும்கூட பொதுவுடைமை பேசியது!
கடைசிவரை சில்லறை விமர்சனங்களில் சிக்காத இந்தக் கலைஞனின் வாழ்வு, நம் பாரதியைபோலவே இளமையில் முடிவுக்கு வந்தது காலத்தின் கொடுமைதான்…!
மூளைக்கு போகும் ரத்தக்குழாய் வெடித்து சிதறியதால் 29 வயசிலேயே இறந்துவிட்டார்..
இவருக்காக பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் ஒன்றை திறந்து வைத்த கலைஞர் கருணாநிதிக்கு என் கோடி நன்றிகள்..!
உழைக்கும் வர்க்கத்தின் ஆசைகளையும் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பாடல் வரிகள் மூலம் எழுதி எழுதி தீர்த்தான் இந்த அலங்காரமற்ற மனிதன்.
சமுதாய இருட்டை கழுவிய, இந்த நெருப்பு சூரியனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியது என்பதை, இந்த தமிழ் சமூகம் என்றென்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பது அவசியம்.