ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் செமிகண்டக்டர் மற்றும் ஏஐ ஜப்பானிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, டெலாய்ட் மற்றும் டேலண்டி ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையே உயர் திறன் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. அதற்கு இந்தியாவில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 9 தொழில்நுட்ப பல்கலை கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகமும் இடம் பெற்றிருந்தது.
ஒரு வாரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அந்த துறையின் வளர்ச்சி மற்றும் வேலையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் படிப்பது, வேலை வாய்ப்புகளை பெறுவது தொடர்பாக 50 ஆயிரம் மாணவ-மாணவிகளை இந்தியா-ஜப்பான் பரிவர்த்தனை செய்து கொள்ள ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செமி-கண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் திறன் வாய்ந்த இந்தியர்களை ஜப்பான் நிறுவனங்களில் பங்கு பெற செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த பரிமாற்றம் மூலம் அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும் ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்புகள்
காத்திருக்கின்றன.

இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக 7 நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் நேற்று அண்ணா பல்கலைக் கழகம் வந்திருந்தனர். அவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழக தொழில் கூட்டுறவு மைய இயக்குநர் சண்முக சுந்தரம் பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள், மாணவர்களின் திறன், பல மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் 16 வளாக கல்லூரிகளின் சிறப்புகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்த அவர் கட்-ஆப் மதிப்பெண் பெரும் மாணவர்களில் அதிகமானோர் அண்ணா பல்கலைக் கழகத்தை தான் தேர்வு செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கிண்டி பொறியியல் கல்லூரி டீன் ஹரிஹரன், அண்ணா பல்கலை கழக பன்னாட்டு தொடர்புகள் மைய இயக்குநர் பாஸ்கரன், தொழில் கூட்டுறவு மைய துணை இயக்குநர் ஷிபு உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
