விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
நாடு முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே விநாயகரை வழிபட கோயில்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேநேரம் சென்னை கோயம்பேடு மொத்த வியாபார கடைகளில் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறுதி நேர வியாபாரமாக விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜைக்கு படைக்கப்படும் தாமரை பூ, விளாம்பழம், கம்பு,கரும்பு, அருகம்புல், பூக்கள், வாழைக்கன்று, எருக்கம் பூ, தோரணை, கலக்கா பழம், பூக்கள், மாலைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
பூக்களின் விலைகளை பொருத்தவரையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 1500 முதல் 1800 வரையிலும், சம்பங்கி பூ ஒரு கிலோ 400 முதல் 500 வரையிலும், சாமந்திப் பூ ஒரு கிலோ 350 முதல் 400 வரையிலும், ஒரு கிலோ ரோஸ் 300 முதல் 400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மாலைகளைப் பொறுத்தவரை குறைந்தபட்சமாக ஜோடி 500 முதல் 5000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பூஜைக்கு படைக்கப்படும் ஒரு தாமரைப்பூ 10 ரூபாய்க்கும், அருகம்புல் ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் , ஒரு ஜோடி வாழை கன்று அறுபது ரூபாய்க்கும், எருக்கம் பூ மாலை ஜோடி 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு தோரணை 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பழங்களைப் பொறுத்தவரை ஒரு கிலோ சிம்லா ஆப்பிள் 100 முதல் அதிகபட்சமாக 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. எகிப்த ஆரஞ்சு ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், மாதுளை ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ சாத்துக்குடி 50 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அண்ணாச்சி 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பூஜைக்கு வைக்கப்படும் மஞ்சள் வாழைப்பழம் ஒரு மாதத்திற்கு முன்பு வரை 50 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் 30 ரூபாய் அதிகரித்து தற்போது அதிகபட்சமாக கிலோவிற்கு 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதேபோல பேரிக்காய் கிலோவுக்கு 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. விளாம்பழம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே பகுதியில் களிமண்ணால் ஆன சிறிய ரக விநாயகர் சிலைகள் குறைந்தபட்சம் 100 லிருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சில்லறை கடைகளுக்கும் மொத்த வியாபார கடைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனவும், இந்த ஆண்டு விதவிதமான விநாயகர் சிலைகள் புதுவரவாக வந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதேநேரம் கடந்த ஆண்டைவிட பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விலை கூடுதலாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.