தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நாளை பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபி தற்போது வரை நியமிக்கப்படவில்லை. சட்டம், ஒழுங்கையும் கூடுதலாக கவனிக்க தமிழக காவல்துறையின் நிர்வாகப்பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2006-ல் பிரகாஷ் சிங் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சட்டம் ஒழுங்கு தலைமை டிஜிபி நியமனம் குறித்த வழிகாட்டுதல்களை உத்தரவாக பிறப்பித்தது.
அதன்படி தலைமை டிஜிபி நியமனத்தில் 30 ஆண்டு பணியாற்றிய சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் (பெரும்பாலும் டிஜிபிக்கள்) பட்டியலை மாநில அரசு யூபிஎஸ்சிக்கு அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படும் லிஸ்ட்டில் உள்ளவர்கள் குறைந்தப்பட்சம் 6 மாதம் சர்வீஸ் உள்ளவர்களாக இருக்கணும். அதில் தகுதியுடைய 3 பேரை யூபிஎஸ்சி (UPSC) தேர்வு செய்து அனுப்பும் அதில் ஒருவரை மாநில அரசு தலைமை டிஜிபியாக (HOPF) நியமிக்கவேண்டும்.
அவ்வாறு நியமிக்கப்படுபவர்களை அரசே நினைத்தாலும் மாற்ற முடியாது, அடுத்த 2 ஆண்டுகள் அல்லது ஓய்வு பெறும் வரை அவர்தான் தலைமை டிஜிபி. தலைமை டிஜிபிக்கு இணையாக ஒருவரையோ, அல்லது கிரைம் டிஜிபி, அல்லது ஆலோசகர் என எதையும் நியமிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கர் ஜிவால் வரும் வரை முறையாக நடைமுறை இருந்து வந்தது. தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பியாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டி.ஜி.பியாக, வெங்கட்ராமன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.