சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் ஒன்று தற்போது பெரிய விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் டின்சோ சீனாவின் ஒரு பொது இடத்தில் தனது லேப்டாப்பை 30 நிமிடங்கள் யாரும் கண்காணிக்காமல் விட்டுவிட்டு, அதற்கு பிறகு எதுவும் நடக்காததை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
“இதை பாரிஸ் நகரத்தில் செய்வது கனவில் கூட சிந்திக்க முடியாது… ஆனால் சீனாவில் மக்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வேறு லெவலா இருக்கிறது,” என்று பதிவில் டின்சோ தெரிவித்துள்ளார். இந்த செயல் அவரது கவனக்குறைவு அல்ல என்றும், சீனாவில் சிறிய குற்றச்செயல்கள் ஏன் குறைவாக இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு மக்களின் சமூக மனப்பான்மையை புரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு சிறிய சோதனை தான் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவ, உலகம் முழுவதும் பலரிடமிருந்து கருத்துகள் பெருக்கெடுத்து வருகின்றன. “எங்கள் நகரத்தில் லேப்டாப்பை இரண்டு நிமிடமும் விட்டால் போதும், அது காணாமல் போய்விடும்,” என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
இதே நேரத்தில் சீனாவின் கண்காணிப்பு அமைப்பு மற்றும் மக்கள் ஒழுக்கத்தை பாராட்டும் பதிவுகளும் அதிகம்.