சென்னை : சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை தேவை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வரிசையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.93,760 ஆகிவிட்டது. தங்கம் எப்போதும் சேமிப்பின் அடையாளமாக இருந்தாலும், தற்போது சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கிவிடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாகத்தான் இருந்தது. குறிப்பாக நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இந்த குறைவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று காலை முதலே சந்தையில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து, திடீரென பெரிய உயர்வாக மாறியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,720 ஆகிவிட்டது. அதேபோல் சவரனுக்கு நேரடியாக ரூ.1,600 உயர்ந்து ரூ.93,760 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 18 காரட் தங்கத்திலும் உயர்வு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.9,780க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.78,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளில் இப்படிப் பெரிய உயர்வுகள் வருவது தங்கச் சந்தையில் பணக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலை மட்டுமன்றி வெள்ளி விலை கூட இன்றைக்கு உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174 ஆகியுள்ளது. ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.1,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் ஒரே நாளில் உயர்வதால், வரும் நாட்களிலும் விலை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு மற்றும் அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
