எனக்கு நோட்டீஸ் அனுப்பி 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கலாமே?- செங்கோட்டையன் பேட்டி

Estimated read time 0 min read

ஜனநாயக முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்காமல் நடவடிக்கை எடுத்தது வேதனையை அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், அதற்கு பத்து நாட்கள் கெடு விதித்திருந்த கே.ஏ செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து டெல்லி சென்ற கே.ஏ.செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகளும் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து ஒருங்கிணைப்பு கருத்துக்காக வாழ்த்துக்களையும் வரவேற்புகளையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்ட கே.ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், உங்களது அடுத்தகட்ட திட்டம் என்ன.? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “காலம் தான் பதில் சொல்லும்… நான் தினசரி வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன். ஆர்பி உதயகுமார் தாயார் இறந்து இருக்கிறார். அதை பார்க்கச் சொல்லுங்கள்.. அவர் வீட்டிற்கு நான் செல்ல முடியவில்லை. அவர் தாயார் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என்னை பொறுத்தவரை பல கேள்விகள் கேட்கிறீர்கள், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்கின்ற வகையில் அடுத்த கட்ட முடிவு என்னவென்றால் அதற்கு காலம்தான் பதில் சொல்லும். என்னால் இன்றைக்கு பதில் சொல்ல இயலாது. நான் எனது பணியை என்றைக்கும் போல் செய்து வருகிறேன்.

Senior AIADMK leader Sengottaiyan

உதயகுமார என்னுடன் நன்றாக பழகக் கூடியவர்கள், பண்பாளர். அவரது தாய் இறந்து துக்கத்தில் துயரத்தில் இருக்கிறார்.. அந்த தாயின் அருமை பெற்ற மகன்களுக்கு தான் தெரியும். ஆகவே இந்த துக்கத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். நான் சொன்ன கருத்துக்கு எனக்கு ஜனநாயக முறைப்படி நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும், 15 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய வேதனை. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், ஊர் ஒன்று கூடினால் தான் தேர் இழுக்க முடியும், எல்லோரும் ஒன்று கூடினால் வெற்றி மட்டுமல்ல மாபெரும் வெற்றி பெற முடியும்.

அந்த நோக்கத்தோடு தான் நான் சொன்னேன்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author