ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 30ம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் இயன் ஹீலி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை அபாரமாக பந்து வீசிய இந்தியா அண்டர் 19 அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஹோகன் 92, ஜெட் ஹோலிக் 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீபேஷ் திவ்வேந்திரன் 5, கிசான் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.
சூர்யவன்சி மிரட்டல்:
அடுத்து விளையாடிய இளம் இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஸ் மாத்ரே அதிரடி காட்ட முயற்சித்து 21 (15) ரன்னில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த விகான் மல்கோத்ராவும் 2 ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார். சமீப காலங்களாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடும் அவர் அண்டர்-19 இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.
தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் டி20 போல ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கி அரை சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் ஜோடி சேர்ந்த வேதாந்தா திரிவேதி நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 78 பந்தில் சதத்தை அடித்த சூரியவன்சி 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 113 (86) ரன்கள் குவித்து அவுட்டானார்.
ஆஸியில் உலக சாதனை:
அவருடன் இணைந்து விளையாடிய திரிவேதி 19 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 140 (192) ரன்கள் குவித்து அசத்தினார். லோயர் ஆர்டரில் அபிஞ்சான் குண்டு 26, ராகுல் குமார் 23, கிளன் பட்டேல் 49 ரன்கள் எடுத்தனர். அதனால் 428 ரன்கள் குவித்த இளம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 185 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஹைடன் ஸ்கிலர், கேப்டன் வில் மலஜ்ஜூக் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இப்போட்டியின் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் வேகமான சதத்தை (78 பந்துகளில்) அடித்த வீரர் என்ற உலக சாதனையை சூரியவன்சி படைத்துள்ளார். இதற்கு முன் 2023இல் ஆஸ்திரேலியாவின் லியாம் ப்ளாக்போர்ட் இங்கிலாந்துக்கு எதிராக 124 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனை.
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் அண்டர்-19 டெஸ்ட் போட்டிகளில் இளம் வயதில் (14 வருடம் 188 நாட்கள்) சதத்தை அடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். அத்துடன் அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை 100 பந்துகளுக்குள் சதத்தை அடித்த வீரர் என்ற நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையையும் சூரியவன்சி சமன் செய்துள்ளார்.