டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் T20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட இந்த தொடர், அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும். இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் அறிவிக்கப்பட்ட அணியில், ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் ரோஹித் ஷர்மா கேப்டன்ஸியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்மன் கில் ஒரு நாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக உள்ளார். ரோஹித், சமீபத்திய தொடர்களில் ஃபார்ம் சரிவு மற்றும் தோல்விகளால் இந்த முடிவுக்கு ஆளானார். ரசிகர்கள், “ரோஹித் போன்ற அனுபவமிக்க தலைவரை நீக்குவது தவறு” என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த மாற்றம், BCCI-யின் இளம் தலைமைக்கான உத்தியை பிரதிபலிக்கிறது. இப்படியான சூழலில்,ரோஹித் தனது இதயப்பூர்வமான உணர்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். 2023 இன் “முடிவடையாத வேலையை” முடிக்க 2027 உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்தி விளையாட விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, அவர் பதிலளிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டார்.
ரோஹித் சர்மா, “ஆம், நான் நிச்சயமாக அதை மனதில் வைத்திருக்கிறேன்… 2023 இல் நான் சாதிக்காததை என்னால் நிறைவேற்ற முடிந்தால் நன்றாக இருக்கும்” என்றார். ஒருநாள் போட்டித் தலைவராக ரோஹித் சர்மாவின் பதவிக்காலம் சிறப்பாக இருந்தது. அவரது தலைமையின் கீழ், இந்தியா ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கியது. எனவே, அவரை போல ஒரு கேப்டனுக்கு 2027 உலகக்கோப்பையில் வாய்ப்பு கொடுத்தால் அவர் இந்தியாவை வெற்றிபெற வைப்பார் என ரசிகர்கள் காத்துகொண்டு இருந்த சுழலில், BCCI அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.