சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 16 முதல் 18 வரை விலகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்டோபர் 1 முதல் இதுவரை 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறினார். இயல்பு அளவு 17 சென்டிமீட்டர் என்பதால், இந்த மாதம் மழை குறைந்திருப்பதாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 10 முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக அமுதா கூறினார். இந்த காலத்தில் புயல் உருவாகலாம் என்றாலும், அதன் இடம் எப்போது உருவாகும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்றார்.
மேலும், இயற்கை நிகழ்வுகளை 100% துல்லியமாக முன்னறிவிக்க முடியாது என்று வலியுறுத்திய அவர், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அமுதா குறிப்பிட்டார்.
அதே சமயம், இந்த மாதத்தில் வழக்கத்தை விட மழை குறைவாக இருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். வானிலை மையம், தினசரி எச்சரிக்கைகளை கண்காணிக்குமாறும் கூறியுள்ளது. மேலும், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.