தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ 5.01 கோடி மதிப்புள்ள சீன பட்டாசு கடத்தல் முறியடிக்கப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முன்னதாக சட்டவிரோதமாக பட்டாசு இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ‘ஆபரேஷன் ஃபயர் டிரெயில்’ எனும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் நாற்பது அடி நீளமுள்ள இரண்டு கொள்கலன்களை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், இந்தக் கொள்கலன்களில் பொறியியல் பொருட்கள் என்ற போர்வையில், 83,520 சீனப் பட்டாசுகள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தல் பொருட்களின் மதிப்பு ரூ 5.01 கோடியாகும்.
அக்டோபர் 14 முதல் 18 வரை மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் போது, டிஆர்ஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் இறக்குமதியாளரைக் கைது செய்தனர். விசாரணையின் அடிப்படையில், மும்பையைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட சென்னை மற்றும் தூத்துக்குடியில் மூன்று பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர்களின் ஒருங்கிணைந்த பங்கிற்காக நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும், தேசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், பொதுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் டிஆர்ஐ உறுதிபூண்டுள்ளது.
