“தமிழ்நாட்ட 6 மாசம் என்கிட்ட கொடுங்க தலையெழுத்தை மாற்றுகிறேன்”- அன்புமணி ராமதாஸ்

Estimated read time 0 min read

ஆறு மாதங்கள் என்னிடம் தமிழ்நாட்டை விட்டுப் பாருங்கள் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஈரோடு என்றாலே நினைவுக்கு வருபவர் ஈ.வெ.ரா. ஈ.வெ.ரா., இல்லையென்றால், பீகார் உத்திரபிரதேச மாநிலங்களை போல பின்தங்கிய மாநிலமாக இருந்திருக்கும். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தை தொடங்கி, மது ஒழிப்பு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.ஈ.வெ.ரா.,வின் பேரன் என வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், மதுவை ஒழிப்பை கொண்டு வந்தாரா? தமிழகத்தில் தி.மு.க.,வினருக்கு சொந்தமான, 11 ஆலைகளில் 48 கோடிக்கு மதுவை, அரசு வாங்கியுள்ளது. தமிழகத்தை கொள்ளையடித்ததும், தமிழகம் நாசமானதுக்கு காரணமும் தி.மு.க.,தான். தமிழகத்தில் அண்ணாதுரை ஆட்சியிலிருந்தபோது, மதுவிலக்கு அமலில் இருந்தது. அடுத்து கருணாநிதி வந்தவுடன் சாராயக்கடையை திறந்து, தற்போது, மூன்று தலைமுறைகளை நாசப்படுத்திவிட்டார்.

தமிழகத்தில் ஒரு புறம் சாராய ஆறும், மற்றொரு புறம் போதை மருந்து, ஊசி, பவுடர், கஞ்சா கலாச்சாரமுமாக மாறிவிட்டது. குக்கிராமங்களில் கூட போதை பொருள் விற்பதற்கு கேடு கெட்ட தி.மு.க., ஆட்சிதான் காரணம். பெண்கள், மாணவிகளுக்கு தி.மு.க., ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. எப்போது என்ன நடக்குமோ? என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. மாணவிகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பிவிட்டு, பயத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. என்னிடம் தமிழ்நாட்டை 6 மாதம் விட்டு பாருங்கள், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுகிறேன். 6 நாட்களில் போதை பழக்கத்தை ஒழிக்க முடியும்.6 மணி நேரத்தில் மதுவை ஒழிப்பேன். இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து, தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப சபதம் எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 80 சதவீதம் மஞ்சள் விளைகிறது. இதற்கான ஆதார விலை அரசு வழங்குவதில்லை. நான் முதல்வராக இருந்தால், குவிண்டாலுக்கு ஆதார விலையாக 25 ஆயிரம் வழங்குவேன்.சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தினால், அனைத்து சமுதாயத்தினரும் பயன் பெறுவர். இதனால், சமூக நீதி பிரச்சினையை தீர்க்க முடியும். நவீன தரவுகளால், அனைத்து சமுதாயத்துக்குமான, பல திட்டங்களை செயல்படுத்த முடியும்.

முதல்வருக்கு அதிகாரம் இருந்தும், கணக்கெடுப்பு நடத்த மனம் இல்லை. கூட்டணி கட்சியிலிருக்கும் வைகோ., திருமாவளவன் உள்ளிட்டோரும் ஏன் சாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தவில்லை? நேபாளம், பங்களாதேஷ், இலங்கையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி செய்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தனர், ஆனால் வன்முறையில் ஈடுபட்டனர் அது தவறு..ஆனால் இங்கு அமைதி புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தி.மு,க.,வை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழியில் படித்தால் மட்டும் பட்டம் பெற முடியும். ஆனால், தமிழகத்தில் தமிழை படிக்காமலேயே பட்டம் பெற முடியும்.

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க முடியவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505க்கு, வெறும் 66 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. இது, 13 விழுக்காடு மட்டுமே. தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அரசு பெயிலாகிவிட்டது.

தமிழகத்தில் தி.மு.க., வெளியேற்றுவது கட்டாயமாகிவிட்டது. 11 இலட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது.ஆனால் 1 இலட்சம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை.இதனை புள்ளி விவரத்தோடு அடுத்தவாரம் வெளியிட உள்ளேன்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author