ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 21ஆம் நாள் சர்வதேச டாய் ச்சி கலை தினமாகக் கொண்டாடப்படும் என்று 5ஆம் நாள் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஐ.நா யுனெஸ்கோ பொது மாநாட்டின் 43ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டாய் ச்சி தினமானது மனிதகுலத்தின் உடல் நலம், நாகரிகப் பரிமாற்றம் மற்றும் உலகின் அமைதி வளர்ச்சியை முன்னேற்றுவதை முக்கியமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
சீனாவில் தோன்றிய டாய் ச்சி கலையானது தத்துவம், சீனப் பாரம்பரிய மருத்துவம் மற்றும் குங்ஃபு கலையின் ஒருங்கிணைந்த வடிவமாகும். நூற்றுக்கணக்கான ஆண்டு கால வளர்ச்சியுடன் கூடிய இக்கலையானது விதவிதமான நுட்பத்துடன் கூடிய குத்து முறைகளைக் கொண்டதாகும். உலகின் 180க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இக்கலையைப் பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை 10கோடியைத் தாண்டியுள்ளது.
முன்னதாக 2020ஆம் ஆண்டில் டாய் ச்சி கலையானது யுனெஸ்கோவின் மனிதகுல பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
