வங்கக் கடலில் எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதியையொட்டி புயல் சின்னம் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குப் பரவலாகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று (நவ. 14) தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும், தொடர்ந்து நவம்பர் 16-ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 17-ஆம் தேதி தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
