இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவ. 18) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிப்பதால்,
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்றும், இதன் காரணமாகத் தமிழகத்தின் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று (நவ. 18) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் புதுச்சேரி மாநிலக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
