சென்னை : கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று உச்சகட்டத்தை எட்டியது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. “அண்ணாமலையாருக்கு அரோகரா… அருணாசலேஸ்வரருக்கு அரோகரா” என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான கிலோ நெய், துணிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தீபம் பிரகாசித்து எழுந்தது.
கனமழை, பனி மூட்டம், குளிர் காற்று என எதிர்பாராத வானிலை இருந்தபோதிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி, சாலையோரம், கோயில் மண்டபங்கள், வீடுகளின் மாடிகளில் நின்று தீபத்தை தரிசித்தனர். காலை முதலே மழை பெய்ததால் மலை முழுவதும் மூடுபனியால் சூழப்பட்டிருந்தது.
இருப்பினும், மாலை 5.55 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதும், சரியாக 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஒளிர்ந்தது. பக்தர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் கைகூப்பி வணங்கினர்.இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நிமிடங்கள் தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் மலை உச்சியில் தெரிந்தது. மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், மலை மீது பனி மூட்டம் விலகி, அர்த்தநாரீஸ்வரர் வடிவம் துல்லியமாகத் தெரிந்ததும் பக்தர்கள் “ஓம் அருணாசலா… சிவ சிவ” என்று உருகினர்.
பலரும் செல்போனில் அதைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.கோயில் நிர்வாகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, தங்கும் விடுதிகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், பக்தர்களின் உற்சாகத்தில் எந்தக் குறையும் இல்லை. மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு, அது 11 நாட்கள் வரை எரியும். இந்த தீபத்தை தரிசித்தால் அனைத்து பாவங்களும் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. “அருணாசலம் என்னும் அண்ணாமலையே அருள் புரிவாய்” என்று பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.
