சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று கடந்த வாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் போன்ற காரணங்களைச் சொல்லி அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை; மாறாக 144 தடை உத்தரவு போட்டு மலைக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று மாலை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.இளங்கோவன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சில நிமிட வாதத்துக்குப் பிறகு அந்த மேல்முறையீட்டு மனுவை அமர்வு தள்ளுபடி செய்தது. இதனால் தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவு முழுமையாக நிலைத்தது.
மேல்முறையீடு தள்ளுபடி ஆன உடனேயே (சுமார் 10-15 நிமிடங்களில்) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கத் தொடங்கினார். அரசுத் தரப்பு வழக்கறிஞர், “இது உணர்வுபூர்வமான விஷயம், சட்டரீதியாக முழுமையான பதில் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் வேண்டும்; வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரினார். அதற்கு நீதிபதி, “எனது உத்தரவால் யாரும் பாதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் மதிப்பை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விசாரணை” என்று கூறி ஒத்திவைப்பைக் கண்டிப்பாக மறுத்தார்.
விசாரணையை உடனடியாகத் தொடர்ந்த நீதிபதி, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் , மதுரை மாவட்ட ஆட்சியர் , மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரை உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சில நிமிடங்களிலேயே மூவரும் ஆஜரானார்கள். காவல் ஆணையர் ஆஜராகி, “கூட்டம் அதிகமாகி விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால், பேரிகார்ட் அமைத்தோம்; சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்கவே 144 தடை உத்தரவு போட்டோம்; நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதற்கு நீதிபதி சுவாமிநாதன் கடுமையான தொனியில் பதிலளித்தார் “நீதிமன்ற உத்தரவுக்கு முன்னுரிமை உண்டு. நீதிமன்றத்தைவிட ஆட்சியருக்குத்தான் அதிகாரம் இருப்பதாக நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். நீதிமன்றத்தின் மதிப்பை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.” என கூறினார்.
அதன்பிறகு, விளக்கங்களைக் கேட்ட பிறகு நீதிபதி பின்வரும் உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்தார். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
இன்றே மாலை (04 டிசம்பர் 2025) மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
