உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஏஐ.. உலகையே ஆட்டம் காண வைத்த தொழில்நுட்பம்

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு இந்தத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்துள்ளது.

இதுவரை அமெரிக்க நிறுவனங்களான ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி போன்றவை ஏஐ உலகில் முன்னணி வகித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமான சீன நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவர் லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட டீப்சீக் (DeepSeek) நிறுவனம், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டீப்சீக் R1 மற்றும் R1 Zero என இரண்டு புதிய ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியது. அமெரிக்க நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி செலவிட்டு உருவாக்கும் ஏஐ மாடல்களுடன் ஒப்பிடுகையில், வெறும் 6 மில்லியன் டாலர் செலவில் இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டன என்பது உலக தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிலும் முக்கியமாக, டீப்சீக் ஏஐ மாடல்கள் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டன. சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ செயலிகள், பழைய பதிப்புகளை மட்டுமே இலவசமாக வழங்கி, நவீன வசதிகளுக்குக் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், டீப்சீக் அனைத்து மேம்பட்ட அம்சங்களையும் கட்டணமின்றி வழங்கியது.

மேலும், டீப்சீக் மாடலை இயக்குவதற்கான செலவும் மிகக் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஓபன் ஏஐ மாடலில் 10 இன்புட் டோக்கன்களை இயக்க 15 டாலர்கள் செலவாகும் நிலையில், டீப்சீக் மாடலில் அதே அளவு டோக்கன்களுக்கு 0.55 டாலர்கள் மட்டுமே செலவாகிறது. இதன் மூலம், ஓபன் ஏஐ மாடல்களை விட 27 மடங்கு குறைந்த செலவில் டீப்சீக் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்றவை க்ளோஸ்டு சோர்ஸ் ஏஐ மாடல்களாக இருக்கும் நிலையில், டீப்சீக் ஓபன் சோர்ஸ் ஏஐ மாடலாக செயல்படுகிறது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பதே இதன் முக்கிய தனிச்சிறப்பாகும்.

இந்த புதிய போட்டியாளரின் வருகை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பெரிதும் கலக்கமடையச் செய்தது. இதன் தாக்கம் பங்குச் சந்தையிலும் வெளிப்பட்டது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. செயற்கை நுண்ணறிவுத் துறையுடன் தொடர்புடைய முன்னணி நிறுவனங்களின் மதிப்பு ஒரே நாளில் பெரும் இழப்பைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.34 லட்சம் கோடி) இழந்ததாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

மிகக் குறுகிய காலத்தில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற டீப்சீக், பிற ஏஐ செயலிகளை விட அதிகமான டவுன்லோட்களைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் அசுர வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ அமெரிக்காவுக்கான ‘எச்சரிக்கை மணி’ என தெரிவித்தது உலகளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில், புகழின் உச்சத்தில் இருந்த ஜனவரி 27 அன்று, டீப்சீக் தளம் கடுமையான DDoS சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் புதிய பயனர்கள் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சில நாட்களிலேயே டீப்சீக் மீண்டும் முழு செயல்பாட்டுக்கு வந்தது.

டீப்சீக் வளர்ச்சியை அமெரிக்க அரசு ‘தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என கருதி, அரசு நிறுவனங்களில் இதைப் பயன்படுத்தத் தடை விதித்தது. மேலும், டீப்சீக் போன்ற சீன நிறுவனங்களுக்கு அதிநவீன என்விடியா சிப்கள் கிடைக்காமல் இருக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டன.

இதற்கிடையே, போட்டியை எதிர்கொள்ளும் வகையில், கூகுள் தனது Gemini 3 மாடலையும், ஓபன் ஏஐ தனது GPT-5.2 மாடலையும் வெளியிட்டது. இம்மாடல்கள் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதும், கோடிங் திறன்களும் மேம்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில், மே மற்றும் டிசம்பர் மாதங்களில் டீப்சீக் தனது V3 தொடர் புதிய பதிப்புகளை வெளியிட்டு, வேகம் மற்றும் துல்லியத்தில் மேலும் முன்னேறியது.

டீப்சீக் வருகையால், பிற ஏஐ நிறுவனங்களும் தங்கள் பிரீமியம் அம்சங்களை குறைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. செயற்கை நுண்ணறிவு என்பது பணக்காரர்களுக்கான தொழில்நுட்பம் அல்ல; அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று என்பதைக் டீப்சீக் உலகிற்கு உணர்த்தியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டு ஏஐ வளர்ச்சியின் வரலாற்றில் குறிப்பிடப்படும் போது, அதில் ‘டீப்சீக்’ என்ற பெயர் ஒரு புரட்சியின் அடையாளமாக நிச்சயம் இடம் பெறும் என தொழில்நுட்ப உலகம் உறுதியாக நம்புகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author