சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தனக்கு ஏற்படுத்திய மனவேதனையை வெளிப்படுத்திய ராமதாஸ், “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.“சில்லறை பசங்களை வைத்து ஒவ்வொரு நாளும் அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார்.
அவமதிப்பதற்கு பதில் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கலாம். நான் வளர்த்த பசங்கள்தான் இப்படிச் செய்கிறார்கள்” என்று மனமுடைந்து பேசிய ராமதாஸ், சென்னையில் சொத்து தகராறில் தந்தையை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மகன் சம்பவத்தை ஒப்பிட்டு, “அதைவிட மோசமானது இது” என்று கூறினார். அன்புமணி தரப்பு தன்னை மோசமாக சித்தரிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
கனவில் தனது தாயார் வந்ததாகவும், அப்போது நடந்த உரையாடலை நினைவுகூர்ந்த ராமதாஸ், “அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?” என்று உருக்கமான கேள்வி எழுப்பினார். “சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை, ஏனென்றால் அன்புமணி நினைப்பு வந்துவிடுகிறது” என்று கூறிய அவர், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை தரவிடாமல் தடுக்க சூழ்ச்சி செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ், “நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டேன். கூட்டணிக்கான நேரம் இன்னும் அமையவில்லை. தொண்டர்கள் எதிர்பார்க்கும் வெற்றிக்கூட்டணியை அமைப்பேன்” என்று உறுதியளித்தார். “95% பாட்டாளி மக்கள் என் பின்னால் அணி திரண்டுள்ளனர். 100-க்கு 2,3 பேர் கூட அன்புமணியுடன் இல்லை” என்று கூறிய அவர், பதவியை பெறுவதில்லை என்ற சத்தியத்தை காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
ராமதாஸின் கண்ணீர் மல்கிய பேச்சு கட்சி தொண்டர்களிடையே உணர்ச்சி பூர்வமான அலை ஏற்படுத்தியது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி தரப்புக்கு இடையேயான மோதல் வெளிப்படையாக வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் கட்சியின் உள் பிளவை மேலும் ஆழமாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர். 2026 தேர்தல் களத்தில் இது பாமகவின் உத்திகளை பாதிக்கலாம் என்று பேசப்படுகிறது.
