இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தில், நேற்று (டிச.28) எதிர்பாராத விதமாகப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த கோர விபத்தில் உடல் கருகி 16 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த சமயம் முதியவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததே உயிரிழப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்ததை உணர்வதற்குள்ளாகவே புகை மூட்டம் மற்றும் நெருப்பு பரவியதால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இந்தோனேசிய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
