2026 புத்தாண்டு முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் மற்றும் இணைய மூலம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து உரை வழங்கினார்.
இந்த வாழ்த்துரையில் ஷிச்சின்பிங் கூறியதாவது:
2025ஆம் ஆண்டு 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் இறுதி ஆண்டாகும். கடந்த 5 ஆண்டுகளில், சீன மக்கள் துணிவுடன் முன்னேறி, பல இன்னல்கள் மற்றும் அறைகூவல்களைச் சமாளித்து, இலக்குகள் மற்றும் கடமைகளை இனிதே நிறைவேற்றி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கப் பாதையில் சீராக முன்னேறி வருகின்றனர். சீனப் பொருளதாரத்தின் மொத்த மதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி, இவ்வாண்டு ஒரு கோடியே 40 லட்சம் கோடி யுவானை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஆற்றல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல், தேசியப் பாதுகாப்பு ஆற்றல், ஒட்டுமொத்த தேசிய ஆற்றல் ஆகியவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் அதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன. சீன மக்களின் இன்பமும், பாதுகாப்பு உணர்வும் வலுப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகால வளர்ச்சி எளிமையானதாக இல்லை. அனைவரும் பங்கு ஆற்றி, சீனாவின் செழிப்பான வளர்ச்சியை முன்னேற்றியுள்ளனர். இதில் பங்காற்றிய மக்கள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கிறேன்.
2025ஆம் ஆண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி நாம் கோலாகலமான நிகழ்வை நடத்தினோம். தைவான் தாயகத்துக்குத் திருப்பியதன் நினைவு தினத்தை உருவாக்கினோம். நாட்டில் நடத்தப்பட்ட இத்தகைய நிகழ்வுகள் மகத்தானவை. இவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீன மக்கள் வரலாற்றையும் தியாகிகளையும் நினைவுக் கூர்ந்து, அமைதியைப் பேணிமதித்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கினோம். சீனத் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான மாபெரும் ஆற்றல் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
புத்தாக்கத்தின் மூலம் உயர் தர வளர்ச்சியை நாம் விரைவுபடுத்தி வருகின்றோம். அறிவியல் தொழில் நுட்பம் தொழில்துறை உற்பத்தியுடன் ஆழமாக ஒன்றிணைந்து, புத்தாக்கச் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுப் பெரிய மாதிரிகள் வெளியிடப்பட்டு, சில்லுகளின் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. புத்தாக்க ஆற்றல் மிக விரைவாக உயர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக சீனா மாறியுள்ளது. தியன் வென்-2 எனும் விண்கலம் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. யாலுசாங்பு ஆற்றின் கீழ் பகுதியின் நீர் மின் திட்டப்பணியின் கட்டுமானம் துவங்கியது. முதல் மின் காந்த கேட்டபுல்ட் விமானம் தாங்கிக் கப்பல் அதிகாரப்பூர்வமாக ராணுவத்தில் ஒப்படைக்கப்பட்டது. மனித உருவ ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் பொது மக்களின் வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. புத்தாக்கம், புதிய ரக உற்பத்தி ஆற்றலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக மாறி வருகின்றது.
பண்பாடு மூலம் தார்மீக அடிப்படையில் தயாகத்துக்கு உயிராற்றல் ஊட்டுக்கிறோம். பண்பாட்டுப் பொருட்காட்சி வெப்பமும், பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வெப்பமும் அதிகரித்து வருகின்றன. உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சீனப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. வூ குங் மற்றும் நே ட்சா கருப்பொருளிலான திரைப்படங்கள் உலகளவில் பிரபலமாகின. பண்டைய பாணிகள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பண்பாடு மற்றும் சுற்றுலா மீது மக்கள் பேரார்வம் காட்டியுள்ளனர். நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் நடத்தப்படும் சூப்பர் விளையாட்டு நிகழ்வுகள், மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. பனி விளையாட்டுக்கள் மக்களுக்கு ஊக்கத்தை ஊட்டியுள்ளன. பாரம்பரியமும் நவீனமும் ஒன்றிணைந்து, சீனப் பண்பாடுகள் மேலும் ஒளிவீசுகின்றன.
அருமையான வாழ்க்கையை நாம் கூட்டாகப் படைத்து அனுபவிக்கிறோம். சி ட்சாங் மற்றும் சின்ஜியாங்கில் கொண்டாட்ட நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டேன். பனி முடிய பீடபூமியிலிருந்து தியன் ஷான் மலைத்தொடர் வரை, பல்வேறு தேசிய இன மக்கள் மாதுளை விதைகள் போல ஒரு மனதுடன் ஒன்றிணைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் ஹாடா என்ற வெள்ளை நிற பட்டுத் துணிகளை வழங்கி, மகிழ்ச்சி தரும் பாடல்கள் மற்றும் நடனங்களின் மூலம் தாய்நாட்டின் மீதான அன்பையும் இன்பமான வாழ்க்கையின் மீதான பாராட்டையும் தெரிவிக்கின்றனர். மக்களின் வாழ்க்கை தொடர்பான விடயங்கள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. கடந்த ஆண்டு புதிய ரக வேலை வாய்ப்பைப் பெற்றவர்களின் உரிமை நலன்கள் மேலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன. முதியோர் பராமரிப்புப் பணிகள், அவர்களுக்குப் பெரும் வசதியளித்துள்ளது. குழந்தை பிறந்த குடும்பத்துக்குத் திங்கள் ஒன்றுக்கு 300 யுவான் மானியம் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீனக் குடும்பத்திலும் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன் சீனா என்ற பெரிய குடும்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.
மனம் திறந்து உலகைத் தழுவுகிறோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியன் ஜின் உச்சி மாநாடு மற்றும் உலக மகளிர் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். ஹாய்நான் தாராள வர்த்தக மண்டலத்தில் தீவு முழுவதும் சிறப்பு சுங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை மேலும் சீராகச் சமாளிக்கும் பொருட்டு, நாட்டின் புதிய சுற்று சுய அர்ப்பணிப்பை சீனா அறிவித்துள்ளது. மேலும் நீதி மற்றும் நியாயமான உலக நிர்வாக அமைப்பு முறையின் கட்டுமானத்தை முன்னேற்ற மூன்று முன்மொழிவுகளை முன்வைத்ததை அடுத்து உலக நிர்வாக முன்மொழிவையும் முன்வைத்தேன். தற்போதைய உலகில் மாற்றமும் பதற்றமும் ஏற்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் போர் தொடர்கிறது. வரலாற்றின் சரியான திசையில் சீனா எப்போதும் ஊன்றி நின்று, பல்வேறு நாடுகளுடன் இணைந்து உலக அமைதி மற்றும் வளர்ச்சியைத் தூண்டி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற விரும்புகிறது.
அண்மையில் தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் நான் கலந்து கொண்டேன். அப்போது குவாங் துங், ஹாங்காங் மற்றும் மக்கெள ஆகியவை ஒற்றுமையுடன் செயல்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஒரே சீனாவில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை உறுதியுடன் நடைமுறைப்படுத்தி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தில் ஹாங்காங் மற்றும் மக்கெள மேலும் சீராக இணைந்து, நீண்டகால செழுமை மற்றும் நிதானத்தை நிலைநிறுத்துவதை ஆதரிக்க வேண்டும். இரு கரை உடன்பிறப்புகள் ஒரே குடும்பத்தினரைப் போல் இருக்கின்றனர். தாய்நாட்டின் ஒன்றிணைப்பு என்ற வரலாற்று ஓட்டம் தடுக்கப்பட முடியாத ஒன்றாகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பட்டால்தான் நாடு வலிமையாக இருக்க முடியும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எட்டு அம்ச ஒழுங்குமுறை விதிகளை ஆழமாக செயல்படுத்தி, கண்டிப்பான முறையில் கட்சியை சீரமைப்பதை விரைவுபடுத்தி, ஊழலை எதிர்த்து சுய புரட்சியை மேற்கொள்வதால், கட்சி மற்றும் அரசியல் ஒழுங்குமுறை சீராகி வருகின்றது. ஆரம்ப கடமையை நிறைவேற்றி இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு, மக்களுக்கு சீராக சேவை புரிய நாம் பாடுபட வேண்டும்.
2026ஆம் ஆண்டு 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். திட்டம், வெற்றிக்கு வழிகாட்டுகிறது. இலக்குகள் மற்றும் கடமைகளை உறுதி செய்து, நம்பிக்கையுடன் முன்னேறி, உயர் தர வளர்ச்சியை முனைப்புடன் தூண்டி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பைப் பன்முகங்களிலும் விரைவுபடுத்த வேண்டும். சீன மக்களின் கூட்டுச் செல்வத்தை முன்னேற்றி, சீன அற்புதம் என்ற புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்போம்.
கனவை நனவாக்கும் போக்கில் தொலைநோக்குப் பார்வைக் கொண்டுள்ளோம். எதிர்காலத்தை நோக்கிய பாதையில் மனவுறுதியுடன் காலடி எடுத்து வைக்கிறோம். துணிவுடனும் உயிராற்றலுடனும், கனவு மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகப் பாடுபட்டு, அருமையான விருப்பங்களை மகத்தான உண்மையாக மாற்றுவோம்.
புத்தாண்டு நாளின் சூரிய உதயத்தில், தாய்நாடு அழகாகவும், செழிப்பாகவும் ஒளிமயமாகவும் மாற வாழ்த்துக்கிறேன். உங்களுக்கும் மன மகிழ்ச்சி ஏற்படவும், கனவு நனவாக வேண்டும் எனவும் நான் வாழ்த்துகிறேன்.
