கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக திமுக அரசை கடுமையாகச் சாடினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் தமிழகம் ‘தலையில்லாத முண்டம்’ போலக் காட்சியளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
கள்ளச்சாராய மரணங்களின் உண்மையை அரசு மறைக்க முயன்றதால்தான் உயிரிழப்புகள் அதிகரித்ததாகக் குற்றம் சாட்டிய அவர், அதிமுக கொண்டு வந்த லேப்டாப் போன்ற திட்டங்களைத் தோல்வி பயத்தின் காரணமாகவே தற்போது திமுக அரசு செயல்படுத்துவதாகத் தெரிவித்தார்.
திமுக என்பது வாரிசு அரசியலை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி என்றும், ஆனால் அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். “அதிமுக ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என்று முழங்கிய அவர், மகளிர் சக்தியின் ஆதரவோடு தமிழகத்தை மீட்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பொங்கல் பரிசு மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், மக்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்யவில்லை என்றும் தனது உரையில் எடப்பாடி பழனிசாமி விரிவாகப் பேசினார்.
