சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான 10 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, நாளை (ஜனவரி 9, 2026) முதல் மிக முக்கியமான சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் (Phase 2) கீழ் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முதல் வழித்தடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழித்தடத்தில் சிக்னல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு ஏற்கனவே மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதிக்கட்ட சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 15 வரையிலான தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். அப்போது, அவர் இந்த பூந்தமல்லி – போரூர் மெட்ரோ சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது, போரூர் சந்திப்பு முதல் பூந்தமல்லி வரை 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். இது மேற்கு சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, பயண நேரத்தையும் பாதியாகக் குறைக்கும் என சிஎம்ஆர்எல் (CMRL) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
