மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து மாநில அரசுகளின் கருத்தை அறிய, தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இதற்கான வரைவு மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, தற்போது விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (Joint Committee) விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்தக் கருத்துக்குப் பதில் அளிக்குமா என்பதே இப்போது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்தத் திட்டம் “ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது” என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2026-க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தத் தேர்தல் முறை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழக அரசு அஞ்சுகிறது. இதனால், மத்திய அரசின் கடிதத்திற்கு தமிழ்நாடு அரசு மிகவும் காட்டமான பதிலையே அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
