சீனா-உருகுவே இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு கருத்தரங்கு பிப்ரவரி 3ஆம் நாள் நடைபெற்றது. இருநாடுகளின் தொழில் முனைவோர்கள் இந்நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் உரையாடினர். தென் அமெரிக்காவிலிருந்து வந்த உருகுவே விருந்தினர்கள் கிட்டத்தட்ட அனைவரும் வீச்சாட்(WeChat) கணக்கைத் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா-உருகுவே இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான உற்சாகம் மற்றும் வாய்ப்புகளை இது வெளிப்படுத்துகிறது.
தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள உருகுவே, வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் வளர்ச்சி பெற்றுள்ள நாடாகும். அதன் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருகிறது. உருகுவே அரசுத் தலைவர் தற்போது சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் சேர்ந்து சீனாவுக்கு வந்த தொழில் முனைவோர்கள் சீனாவில் சந்தை வாய்ப்புகளை விரிவாக்குவதன் மீது அதிக நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இருநாடுகள், பாரம்பரிய ஒத்துழைப்பு துறைகளில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
