இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) தன்னை நாட்டின் அதிபராகவும், அதிகாரப்பூர்வ சர்வாதிகாரியாகவும் நிலைநிறுத்திக் கொள்ளும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை அமல்படுத்திய மின் ஆங், தற்போது ‘ஜனநாயகப் போர்வை’ போர்த்திக் கொண்டு அதிபர் பதவியைக் கைப்பற்ற முயல்கிறார்.
இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘ஒன்றிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி’ பெரும்பான்மைக்கு நெருக்கமான இடங்களை வென்றுள்ள நிலையில், மார்ச் 30-ம் தேதியான இன்று (திங்கட்கிழமை) அதிபர் பதவிக்கான வேட்பாளராக மின் ஆங் ஹ்லைங் முறைப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மியான்மரை முழுமையாகத் தனது சட்டப்பூர்வக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளார்.
சீனாவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் மின் ஆங் ஹ்லைங், அதிபராகப் பொறுப்பேற்றால் அது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆங் சான் சூகி உள்ளிட்ட ஜனநாயகத் தலைவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், ராணுவத் தளபதி அதிபராகும் இந்த மாற்றம் மியான்மரை ஒரு முழுமையான சர்வாதிகார நாடாக மாற்றும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், மியான்மரில் ராணுவ ஆட்சியாளர் அதிபராவது இந்தியாவிற்கு மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
